வெள்ளி, 29 மார்ச், 2013

கவிதை போட்டிற்கான வெற்றியாளர்களின் சான்றிதழ்கள்




தாமரை 08

கவி உலகில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் அன்பான சகோதரர் கவியன்பன் கலாம். இலங்கை மக்கள் மனங்களில் நிழலாடும் இந்தியக் கவிஞர். இந்த அன்பான சகோதரன் என் கேள்விகளுக்குள் பதிலாக அமர்ந்து கொண்டார். அவரை அன்போடு வரவேற்கின்றேன் 

...............................................................................................................






வினா :- உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்? உங்களைப் பற்றிக் கூறுங்கள்?



விடை :- இந்தியா என் தாய்நாடு. மாநிலம் தமிழ்நாடு. மாவட்டம் தஞ்சாவூர் ஊர்  அழகிய

                கடற்கரைக் கிராமம் “அதிராம்பட்டினம்”  என் வாப்பா 1957 வரை உங்களின்

                இலங்கையில்   கொழும்பில் வணிகம் செய்தவர். பின்னர் இனக்கலவரத்தால்
                இந்தியாவிற்குத் திரும்பி வந்து வணிகம் செய்தார்கள். (இப்பொழுது என்
                சாச்சா மட்டும் குடும்பத்தோடு கொழும்பில் இருக்கின்றார்கள்) அதனால் தான் 
எனக்கும் இயல்பாகவே இலங்கையர்கள் மீது அளவற்ற பிரியம் உண்டாகின்றது.
நானும் வணிகவியலில் ஆர்வம் கொண்டவனாதலால் வணிகவியல் பட்டம் பெற்றவன்
(பி.காம்) 1980 முதல் இன்று வரை அயல் நாட்டின் பிழைப்பில் வாழ்கிறேன்.
எனக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மருமகன்(மகளின் கணவர்) மற்றும் அழகும்
அறிவும் நிறைந்த பெயரன் (மகள் வழி) அடங்கிய ஒரு சிறு குடும்பம். என்னுடன்
பிறந்தவர்கள் 2 அக்காள்கள், 2 தங்கைகள், ஓர் அண்ணன், ஒரு தம்பி. உம்மா
அவர்கள் இறந்து விட்டார்கள். வாப்பா அவர்கள் இருக்கின்றார்கள்.

வினா :- எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது?



விடை :- 1973ல் பள்ளியிறுதியாண்டில் “யாப்பிலக்கணம்” வகுப்பில் தமிழாசிரியர்

நடத்திய விளக்கங்களால் ஈர்க்கப்பட்டு அன்றே ஒரு வெண்பாவை வனைந்தேன்.

(இலக்கணம் என்றால் தலைக்கனக்கும் என்று கைப்புடன் மற்ற மாணவர்கள் எல்லாம்
அவ்வகுப்பை அவதானிக்காத பொழுது யான் மட்டுமே அவ்வகுப்பில் மிகவும்
ஈடுபாட்டுடன் இருந்ததை அவதானித்த என் தமிழாசான் புலவர் திரு. சண்முகனார்
அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்) அன்று தொடக்கம் இன்று வரை
யாப்பிலக்கணமும், மரபுவழியும் என்னுயிராய் ஒட்டிக் கொண்டன. அவ்வாசானின்
அறிவுறுத்தலுக்கிணங்க “நூலகமே என் உலகம்” என்று அவ்விளம் வயதில்
வாசிப்பில் நேசிப்பைக் கொண்டேன். குறிப்பாக, யாப்பின் வகைகளில் எல்லா
வகைப் பாடல்களையும் வனைய வேண்டும் என்ற பேரவா கொண்டேன். இடையில் பணி
நிமித்தம் அயல் நாடுகள் (சவூதி, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள்)
சென்றதால் எனக்கு இருந்த ஈடுபாடும் குன்றியது.



வினா :-  தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான (ஒரு ஆசிரியர்) உங்கள் நெருக்கம்

      பற்றி சொல்லுங்கள்?


விடை :- முதலில் சொன்ன என் தமிழாசிரியர் மட்டுமல்ல  எங்களூரின் தமிழறிஞரும்,
எழுத்தாளரும், கவிஞருமான “அதிரை அஹ்மத் காக்கா” அவர்கள் என்னை மேலும்
ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் என் வலைத்தளத்தில் வருகை புரிந்து ஒரு
பின்னூட்டம் எழுதினார்கள் இவ்வாறு,
“இற்றைப் பொழுதினில் மரபுவழியினைப் பற்றிப் பிடித்தால் தமிழறிஞர்களின்
பட்டியலில் இடம் பெறுவாய்” என்ற ஆசியுடன் வாழ்த்துரை அளித்தார்கள். அன்று
முதல் மீண்டும் யாப்பிலக்கணம் மேலும் கற்க அவர்களின் துணை நாடினேன்.
மேலும், என் எழுத்தில் உண்டாகும் ஒற்றுப்பிழைகள்/ சந்திப்பிழைகள் கண்டு
அவற்றைத் திருத்தும் நல்லாசானாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.
துபாயில் ஒரு கவியரங்கத்தில் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிஃபுத்தின்
வாப்பா அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்! அவர்களும் ,”என்னைப் போல்
மரபு வழிப் பாக்கள் படைப்பதில் கவியன்பன் கலாம் எனக்கு வாரிசாக
இருப்பார்” என்று வாழ்த்துரை அளித்தார்கள்.
இணையத்திலும், முகநூலிலும் எனக்கு யாப்பிலக்கணம் கற்பிக்கும் ஆசானகளாக,
கலைமாமணி இலந்தையார் (நியூ ஜெர்சி - “சந்த வசந்தம் இணையம்” நிறுவனர்)
மற்றும் புதுவையில் வாழும் புலவர் இராஜ. தியாகராஜனார் ஆகியோரும் என்
வழிகாட்டிகளாய் நின்று யாப்பின் எல்லா வகைப் பாக்களையும் இயற்றும் திறனை
என்னிடம் வழங்கி வருகின்றார்கள்.

வினா :- மரபுக்  கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள்
புதுக்கவிதையும் எழுதி வருகின்றீர்கள் இதில் எதில் மன திருப்தி
பெறுகின்றீர்கள் ?



விடை :- உண்மைதான். முன்னர்  சொன்னபடி 1974 முதல் மரபுப் பாவின்பால் நாட்டம்

அதிகம் உண்டானது. இடையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் “இதுவரை நான்”

என்னும் கவிதைத் தொகுப்பைப் படித்தேன். அதுவரை நான் மரபென்னும் கடலை
விட்டு, புதுமை என்னும் நதியில் நீராடத் துவங்கினேன். எளிமையாக
இருந்தாலும், என் மனம் மரபில் தான் மீண்டும் கலக்கின்றது. அதற்கு என்
ஆசான்களின் ஆசிகற்றான் காரணியமாக அமையும் என்று நினைக்கிறேன். மரபுப்பா
இனிமை. புதுக்கவிதை என்பது புது.  துளிப்பா(ஹைகூ) எளிமை என்ற
கண்ணோட்டமும் என்னிடம் உண்டு. புதுக்கவிதையில் ஓர் உணர்வின் உயிரோசையைக்
காண்கிறேன். அதனால் மூன்று வகையிலும் என்னால் இயற்ற முடியும்.  நான் கவிதை
எழுதவில்லை. கவிதையாய் வாழ்கின்றேன்! தமிழே என் மூச்சு,கவிதையே என்
பேச்சு!

வினா :- மூத்த  எழுத்தாளர்களின் எழுத்துக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக
வழிகாட்டுகிறார்களா?

விடை :- ஆம். வாசிப்பில் நேசிப்பைக் கொண்டவன் என்பதாலும், படிப்பாளிதான்
படைப்பாளியாக ஆக முடியும் என்பதும் என் வாழ்வின் ஆரம்பப் பள்ளிக்
காலத்திலும் உணர்ந்தவன். நூலகமே என் உலகம் என்று வாழ்ந்தவன். இன்று,
இணையமே என் இருதயம் என்று வாழ்கிறேன்.
”தாய்” வார இதழின் ஆசிரியர். வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் அவர்களின்
எழுத்து நடையை வாசித்தேன். புதுக்கவிதையை நேசித்தேன்
என்றும் நான் போற்றும் கவிக்கோ அப்துர் றஹ்மான் அவர்களின் படைப்புகளை
வாசிப்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவன். அவர்களை நேரில் காணும் பேறு
பெற்றவன்.
என்றும் என் மானசீகக் குருவாகக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை
முன்னிறுத்திக் கொண்டு அவர்கள் எப்படி எல்லாம் உணர்வின் ஓசையுடன்
கவிதைகளைப் படைக்கின்றார்கள் என்று அவர்களின் கவியரங்க விழிமங்களைத்
தேடிக் கேட்கிறேன்.
முன்னர்ச் சொன்ன, என் ஆசான்களின் படைப்புகளை நேராகப் பெற்றும், இணையம்
வழியாக மின்மடலில் பெற்றும் வாசிக்கிறேன். அவர்களின் படைப்புகளில் எப்படி
இலக்கணங்களைக் கையாள்கின்றனர் என்று உன்னிப்பாக அவதானிக்கிறேன்.

வினா :-  படிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

விடை :- இல்லவே இல்லை; இளமையில் கல் என்பது போல், இளமையில் எழுது என்று எனக்குள்
ஏற்பட்ட ஓர் இனம் புரியாத பேரவா என்னுள் தீயாய் இருப்பதால் என்னால்
எழுதுவதை ஒரு சிரமமாக நினைப்பதில்லை. ஆயினும், தற்பொழுது உடல்நிலை
ஒத்துக் கொள்ளாத நிலைமையைக் கண்டு என் துணைவியார் அவர்களும்,என்
நண்பர்களும், என்னுடன் பணியாற்றும் மேலாளர்களும் என்னைக் கடிந்து
கொள்கின்றனர் “ நீ எழுதுவதை நிறுத்தினால் உன் உடல் நலம் பெறும்" என்று.
ஆனால், என் மனம் எழுத்திலும், கற்பதிலும், கற்பிப்பதிலும் தான் பேரின்பம்.
  அலாதியான ஓர் ஆன்மத் திருப்தியை அடைவதை உணர்கிறேன். தேனின் இன்பம்
என்பதைச் சுவைத்தவர்க்கு மட்டும் தான் தெரியும். புரிய வைக்க இயலாது!

வினா :-  சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன?

விடை :- எல்லாம் கவிதைகள் என்று வலம் வருகின்றன என்பதைத் தான் ஏற்க மறுத்தாலும்,
உணர்வின் ஓசை யாகவே ஒலிக்கின்ற அவ்வரிகள் கவிதையின் தாக்கத்தை
ஏற்படுத்தத்தானே செய்கின்றன என்ற ஓர் உடன்பாட்டால் உளமேற்கும் நிலையில்
உள்ளேன். ஆயினும், எந்த விதமான இசை/ஓசை நயமோ, எதுகை மோனை கூட இல்லாமல்,
வரிகளை மடக்கி, மடக்கி எழுதி விட்டால் அதுவும் கவிதையாகும் என்ற ஓர் அவல
நிலையைத் தான் என் மனமும் கவிதையின் உண்மையான ஆர்வலர்கள்/ பாவலர்கள்
எல்லாரும் ஏற்க மறுக்கின்றனர்.
மரபுப்பாக்களை என் ஆசான் இலந்தையார் அவர்கள் நடத்தும் “சந்த வசந்தம்”
என்னும் இணையத்திலும், புதுவைப் புலவர் இராஜ.தியாகராஜனார் அவர்களின்
முகநூல் பக்கத்திலும் வாசிக்கிறேன்.
புதுக்கவிதைகளைக் கவிஞர் கனடா புகாரி, கவிஞர் பொத்துவில் அஸ்மின்,கவிஞர்
பரங்கிப்பேட்டை இப்னுஹம்தூன், கவிஞர் குவைத் வித்யாசாகர், அதிரை
கவிவேந்தர் சபீர் அபுசாருக்ஹ், முத்துப்பேட்டை கவியருவி மலிக்கா ஃபாருக்,
கவிதாயினிஆச்சி தேனம்மை, கவிதாயினி வேதா இலங்காதிலகம் மற்றும் என்
முகநூல் நண்பர்களின் படைப்புகள் வழியாகவும் தேடித் தேடி வாசிக்கிறேன்.
நவீனக் கவிதைகளைக் கவிஞர்கள் இத்ரீஸ், சிராஜ்டீன் சிறோ மற்றும் ஸமானின்
கவிதைகளில் காண்கிறேன்.
ஹைகூ என்னும் துளிப்பாக்கள் என் மின்மடல் தேடி வந்து விழுகின்றன.
குறிப்பாக மதுரை இரா.இரவி. மற்றும் ரமேஷ் போன்ற ஹைகூ கவிஞர்களின் ஹைகூ
கவிதைகள் என் மின்மடலுக்கு நாடோறும் வருகின்றன.  அவைகளை ரசித்து
வாசிப்பேன்.

வினா :- கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில்
      உதவுகின்றன ?



விடை :- கவிதைக்கான இணையத் தளங்களாகவே நான் தேடித் தேடி  இரவெலாம் விழித்து

இணையத்தில் புகுந்து நுழைந்து அனைத்துக் கவிதை விரும்பும் தமிழ்த்

தளங்களிலும் என் படைப்புகளை வரவேற்கும் வண்ணம் நெருங்கிய நட்பை
வைத்துள்ளேன். அவற்றுள்
தமிழ்த்தோட்டம்
தமிழ்மணம்
நீடூர்சன்ஸ்
முதுகுளத்தூர்டைம்ஸ்
அய்மான் டைம்ஸ்
அதிரை நிருபர்
அதிரை எக்ஸ்பிரஸ்
சமூக விழிப்புணர்வுப் பக்கங்கள்
மற்றும்
இலண்டன் தமிழ் வானொலியின் “பா முகம்”
,முகநூலின் கவிதைக் குழுமங்கள்
சங்கமம் தொலைக்காட்சி,துபை
அய்மான் சங்கம், அபுதபி
பாரதி நட்புக்காக, அபுதபி
யு ஏ இத் தமிழ்ச் சங்கம்
வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு,துபை
தமிழர்ப் பண்பாட்டு நடுவண் கழகம், துபை
துபாய்த் தமிழர்ச் சங்கமம்
ஆகிய தமிழர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள்/ கவியரங்குகளில் என் கவிதைகள்
வரவேற்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வானலை வளர் தமிழ் என்னும் இலக்கிய அமைப்பு மாதந்தோறும்
நடத்தும் கவியரங்கில் ஒரு கவியரங்கில் என்னைத் தலைமைக் கவிஞராய் அமர
வைத்து 33 கவிஞர்களை என் “மரபுப்பாவில்” அவர்களின் திறன் கூறிக் கவிபாட
அழைக்கும் பெரும்பணியை அவ்வமைப்பின் அமைப்பாளர் உயர்திரு. காவிரிமைந்தன்
அவர்கள் எனக்களித்து என்னை மதித்து அக்கவிஞர்கட்குச் சான்றிதழ்களும் என்
மரபுப்பாவில் வடித்து என்னையும் மேடையில் பரிசும் சான்றிதழும் கொடுத்து
மதிப்பளித்ததை என் வாழ்நாளில் மறக்கவியலாத ஓர் அரிய தருணம்.
இப்படியாக என் கவிதைகளை நாடிக் கேட்பவர்கட்குத் தவறாமல் அனுப்புகிறேன். அவற்றுள்
உங்களின் “தடாகம் இலக்கிய வட்டம்” சர்வதேச அளவில் புகழ்பெற்று என்
கவிதையையும் ஏற்றுள்ளது என்பது யான் பெற்ற பேறென்பேன்!



வினா :- புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி

கூறமுடியுமா ? கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?



விடை :- புதுக்கவிதை எளிமையும் புதுமையும் கலந்த ஓர் உணர்வின் வடிவம்;

நவீனக் கவிதை “ஞானத் தேடல்” போன்று உளவியல் அறிவுடன் உன்னிப்பாய்

அவதானித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்ற ஓர் ஆழமான கடல்!
கவிதை என்பது கற்பவரின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்;
கவிக்கோ அப்துர் றஹ்மானின் ஒரு கவிதையில், அண்ணல் நபி(ஸல்) அவர்களைத்
தாயிஃப் மக்கள் கல்லால் அடித்தார்கள் என்ற செய்தியைக் கவிதையில்
சொல்வார்கள் இப்படியாக,
 கல்லின் மீது பூவை வீசியவர்கள்
முதன்முதலாக
பூவின் மீது கல்லை வீசினார்கள்!”
மேலே சொன்ன விடயம் ஒன்றுதான் அதனை உரைநடையில் சொல்வதை விட இவ்வண்ணம்
கவிநடையில் சொன்னால் உள்ளத்தில் உண்டாக்கும் தாக்கம் தான் கவிதை என்னும்
ஆக்கம் தரும் நோக்கம்.



வினா :- கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?



விடை :- கவிதைகள் என்பதும் ஒரு கற்பித்தலே. கற்பித்தலால் என்ன சாதிக்க முடியுமோ

அதனையே கவிதையிலும் சாதிக்கலாம். உதாரணமாக என் கவிதை “வயசு வந்து போச்சு”

என்ற கவிதையில் வரதக்‌ஷணை என்னும் கொடுமையைச் சாடியிருந்தேன். அந்தக்
கவிதையைப் படித்த ஓர் அன்பர் ”வரதக்‌ஷணை வாங்காமல் திருமணம் முடிப்பேன்”
என்று எனக்கு மின்மடலில் மறுமொழி அனுப்பியதும். அதே கவிதையைக்
கவியரங்கில் பாடிய பொழுது ஓர் இளம் மங்கைக் கண்ணீர் மல்க,”எப்படி ஐயா
எங்களின் உணர்வுகளை இப்படி வடித்தீர்கள்” என்று வினவியதும் என் கவிதையின்
தாக்கம் என்று உணர்கிறேன்!
சமுதாயப் பிரச்சினைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களை  நம் கவிதைகள்
என்னும் சிரட்டையளவின் சிரத்தையால் தடுப்போம் என்பதே என் நிலைபாடு.



வினா :- கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை

என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?



விடை :- துவக்கத்தில் சிறுகதைகள் எழுதினேன். அவைகள் இதழாசிரியர்களால்

ஏற்கப்படவில்லை. அதனால் நிறுத்தி விட்டேன். ஆயினும், சிறுகதைகள்,

நாவல்கள் மற்றும் இலக்கியத்தின் எல்லாப் பரிணாமங்களும் எனக்கு
விருப்பமானவைகள் என்பதால் அவைகளையும் வாசிப்பேன். நேசிப்பேன்.



வினா :-  உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?



விடை :- ஆம். முதலில் சொன்னேன் அல்லவா. பணியின் காரணியமாக உலகம் சுற்றியதால்

என்னால் ஓரிடத்தில் உட்கார்ந்து எழுத இயலாமற் பணி ஒன்றே நோக்கமாக அமைந்து

விடுதல். இந்லையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முதுமை மற்றும் நோய்கள்

துணைவியார், நண்பர்கள், மேலாளர்களின் அன்பான அறிவுறுத்தல்கள்

இவைகள் என் எழுத்துப் பயணத்தின் தடைக் கற்கள்!

முன்னர்ப் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு முடிந்ததும் (1973) தமிழின்பால்
கொண்ட காதலால், “புலவர்” பட்டயம் படிக்க வேண்டும் என்ற பேரவாவினால்
அதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்த வேளையில், என் குடும்பத்தார்
கூறினார்கள். “ பாட்டுக் கட்டினால் நோட்டுக் கட்ட முடியாது” என்று.
இயல்பாகவே வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவனாதலால்,
“வணிகவியலை”பட்டப் படிப்பாக்கினேன்.  இன்றும் வணிகவியலை இலவயமாகக்
கற்பிக்கிறேன். என் வாழ்வில் இரு கண்கள். கணக்குப் பதிவியலும்.
கவிதையும்.
கணக்குப் பதிவியல் (accountancy) என் தொழில்
கவிதையியல்   என் இலக்கிய எழில்

வினா :- இறுதியாய் என்ன சொல்ல போகிறீகள்?



விடை :- கண்டது கற்கின் பண்டிதனாவான்

படிப்பாளியே படைப்பாளியாவான்

கற்போம் கற்பிப்போம்
இலக்கியமென்னும் மடியில் இளைப்பாறுவோம் இருதயம் இந்தத் “தடாகத்தின்”
தென்றலால் இன்பம் அடையும்!

வினா :- படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?

விடை :- படிக்கும் காலத்தில் பயிற்றுவிக்கும் நல்லாசான்கள் கிட்டியதன் அரும்பேறு என்பேன்.



வினா :-எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?



விடை :- படைப்பாளிகள் எல்லாரும் தன் அனுபவங்களைத் தான் பல் வேறு பரிணாமங்களுடன்

இலக்கிய வடிவில் நமக்கு விருந்தாகப் படைத்து நம் அறிவுப் பசியாற

வைக்கின்றார்கள். உணவில் வகைகளும், சுவைகளும் வேறுபடுகின்றன போலவே,
இவர்களின் படைப்புகள் என்னும் இலக்கிய விருந்திலும் சுவைகளில்,
உருவத்தில் வேறுபாடுகள் இருப்பினும் ஏற்புடையனவாகவே வலம் வருகின்றன
என்பதே என் கண்ணோட்டம்.

பொறுமையோடு எனது கேள்விகளுக்கு அமைதியாக நிதானமாக பதில் தந்த உங்களுக்கு என் இதயம் கசியும் நன்றித் துளிள் 


வாழ்க மன நிறைவோடு  மன மகிழ்வோடு  நலமோடு வாழ்த்துக்கள் 

......................................................................................................................

பேட்டி --கலைமகள் ஹிதாயா ரிஸ்வி - இலங்கை 
அமைப்பாளர் 
தடாகம் கலை இலக்கிய கல்வி,கலை,கலாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

வியாழன், 21 மார்ச், 2013

தாமரை........... 07 இசை அமைப்பாளர் (பாடகர் கே .ஜெயந்தன் )


இலங்கை மண்ணில் புகழ் பூத்து இசை மணம் வீசிக் கொண்டிருக்கும் நறுமணம் கமழ்ந்த இனிய குரல் வளம் கொண்ட பாடகர்
 அறிவிப்பு துறை , கவிதைதுறை ,நடிப்பு துறை , ஒலிபதிவு துறை போன்றவற்றில் நிறைய ஈடுபாடு கொண்ட இசை அமைப்பாளர்
அன்பான நேசமுள்ள சகோதரர் 
அன்புத் தம்பி கே .ஜெயந்தன் அவர்களை தடாகம்  இலக்கிய கல்வி, கலை, கலாசார, சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மூலமாக சந்திப்பதில் நான் பெருமை அடைகின்றேன் 



                                       


வினா :-     உங்கள் இசை துறையின் ஆரம்பம் பற்றி சொல்லுங்கள் ?


விடை :-  என்னுடைய சொந்த இடம் யாழ்பாணம் கரவெட்டி கிழக்கு. அப்பாவின் தொழில்  


                நிமித்தம் காரணமாக ஏழு வயதிலேயே வந்தாரை வாழ வைக்கும் வவுனியாமண் என்னையும் வரவேற்று கொண்டது.நான் சிறு வயது முதல் உயர்தரம் வரை கல்வி கற்றது வவுனியா விபுலானந்த கல்லூரி. சிறுவயதில் இருந்து பாடும் திறமை தானாக என்னிடம் வளர்ந்தது. காரணம் எனது தந்தையார் ஒரு பாடகர் ,நடிகர் ஆரம்பகாலங்களில் பல மெல்லிசை பாடல்களை இலங்கை வானொலியில் பாடியுள்ளார் .பல மேடை கச்சேரிகள் செய்து வந்தவர்.இதே போன்று எனது மாமா கீழ் கரவை கி.குலசேகரன் அவர்களும் இலங்கையில் பிரபல கவிஞர் பல பாடல்களை எழுதியவர்.எனது அம்மாவின் சகோதரர்களும் அப்பாவின் சகோதரர்களும் சிறந்த இசை கலைஞர்கள் இவ்வாறான இசை குடும்ப பின்னணியில் எனக்கும் இசை தானாகவே உருவானது



வினா :- இசையுலகில் எவ்வாறு அறிமுகம் ஆனது?


                                  

விடை :- இசை துறையின் ஆரம்பம் என்று சொன்னால் அதன் ஆரம்பம் நான் கல்வி கற்ற வவுனியா விபுலானந்த கல்லூரி என்று தான் சொல்ல வேண்டும்.என்னை முதன் முறையாக ஏழு வயதில் மேடை ஏற்றி பாட வைத்தவர் அப்போதைய எனது வகுப்பு ஆசிரியை திருமதி சாந்தி பரமேஸ்வரன் அவர்கள். அதன் பின்னர் பாடசாலையில் வில்லுபாட்டு ,தனி இசை ,நாடகம் போன்ற போன்ற பல்வேறு போட்டிகளில் மாவட்டம் ,மாகாண மட்டம் ,அகில இலங்கை போட்டி ரீதியாக வெற்றிகள் பெற்றுள்ளேன்.எனக்கு இசை கற்பித்த சங்கீத ஆசிரியை திருமதி சிதம்பரநாதன் ஆசிரியை அவர்கள் என் இசையின் குரு.ஏழு வயதில் முதன் முறையாக எனக்கு பியானோ வாங்கி தந்த என்னுடைய மாமா திரு கருணாகரன் அவர்கள் தந்த ஊக்குவிப்பாலும் எனது சித்தப்பாதிரு மதியழகன் அவர்கள் வாங்கித் தந்த கிபோர்ட் இனாலும் நானும் ஒரு கலைஞன் ஆக்கபட்டேன். கி போர்டு இசையினை சிறுவயதில் நானாகவே கற்றுக்கொண்டேன்.சிறுவயதில் இசை அமைக்கும் ஆற்றல் என்னிடம் தானாக வளர்ந்தது இதற்கு முதன்முறையாக களம் கிடைத்தது சூரியன் வானொலியின் பாடுவோர் பாடலாம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் திரு விமல் அவர்களால் வவுனியாவில் இருந்து இயங்கிய எமது இசை குழு சூரியன் வானொலியின் கலையகத்துக்கு அழைக்கபட்டது. அப்போதைய சூரியன் வானொலியின் அறிவிப்பாளர் திரு லோஷன் அண்ணா அவர்களால் முதன் முறையாக எனது சொந்த பாடலான மனமே கோபமா என்ற பாடல் சூரியன் வானொலியில் அறிமுகம் செய்ய பட்டது .இதனை தொடர்ந்து பட்டாம்பூச்சி பறக்குது ,சிக்குபுக்கு ரயிலே போன்ற பாடல்கள் பிரபல்யம் பெற்றன.சக்தி வானொலியின் நம்ம ஹிட்ஸ் நிகழ்ச்சி மூலமாக திரு அபர்ணா சுதன் அவர்களால் எனது பாடல்கள் நம்ம கிட்ஸ் நிகழ்ச்சியில் பிரபலமானது. இதை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பல்லாயிர கணக்கான போட்டியாளர்கள் பங்குகொண்ட சக்தி தொலைக்காட்சி ஒரு வருட காலமாக நடாத்திய  இசை இளவரசர் நிகழ்ச்சியில் பல லட்சம் எஸ். எம். எஸ் வாக்குக்களால் இசை இளவரசனாக முடிசூட பட்டேன்


                                   


வினா :- உங்கள் குடும்பமே இசையில் இணைந்துள்ளது. அந்த வகையில் உங்களது சகோதரர்கள்      
    எவ்வாறு உங்களுக்கு உதவுகிறார்கள்?



விடை :- எனக்கு இரண்டு சகோதரர்கள் ஜெயரூபன் ,பிரதா எனது சகோதரன் ஜெயரூபன் சக்தி வானொலியால் நாடாளாவிய ரீதியில் நடத்த பட்ட வானொலி நட்சத்திரம் போட்டியில் வெற்றி பெற்றவர். இப்பொழுது இசை துறையில் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பல இசை தொகுப்புகளிலும் பாடல்கள் பாடி வருகிறார்.அதே போன்று எனது சகோதரி ஜெயபிரதா யாழ்பாணம் ராமநாதன் நுண்கலை கல்லூரியில் இசை பயின்று வருகிறார்.எமது இசை குழுவின் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தும் பல சொந்த பாடல்களை பாடிவருகிறார் சகோதரர்கள் இருவரும் இசைத்துறையில் இருப்பதனால் எனக்கு பாடல்கள் பாடுவதற்கோ இசை சம்பந்தமான தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள உதவியாக உள்ளது.இதற்கு எமது அப்பா திரு கந்தப்பு ,அம்மா விஜயா ஆகியோர் மேலும் ஊக்குவிப்பினை வழங்கி வருகின்றனர்.


வினா :- பல வெளிநாடுகளில் உங்களது இசை நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அந்தவகையில், புலம்பெயர் உறவுகளின் மத்தியில் உங்களுடைய இம்முயற்சிக்கு எவ்வாறான ஆதரவுகள் கிடைக்கின்றன / வெளிநாடுகளில் நடந்த நிகழ்வுகளை பட்டியலிடுங்கள் ?


                                             


விடை :- எமது பாடல்களை இணையத்தளம் ஊடாக ரசிகின்றார்கள். தொலைபேசி 
ஊடாகவும் நேரிலும் சந்தித்து பலர் ஊக்குவிப்பினை வழங்குகிறார்கள்.அண்மையில் வெளியிட்ட என்னுடைய இசையில் உருவான காந்தள் பூக்கும் தீவிலே ,யாழ்தேவி ,வவுனியா மண்ணே,எங்கோ பிறந்தவளே ,கண்ணோடு கண்கள் பேசுதே போன்ற பாடல்கள் லட்சகணக்கான ரசிகர்களை Youtube இணையத்தளத்தில் ஈர்த்துள்ளது. பல புலம்பெயர் மக்களின் பிரபல வானொலிகளான லண்டன் IBC தமிழ் கனடா CMR தமிழ் ,லண்டன் தமிழ் வானொலி .அவுஸ்ரேலிய தமிழ் வானொலி போன்ற பல வானொலிகளில் பல ரசிகர்கள் விரும்பி கேட்பது எமது பாடலாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பி ஐயா அவர்களின் நினைவு தினத்தை முன்னிடு கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான தமிழ் மொழி வாழ்த்து பாடலுக்கு நடனமாடி இருந்தார்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்ந்தும் என்னுடைய பாடல்களை YOUTUBE இணையத்தளத்தில் JEYANTHAN13 என்பதை டைப்  செய்து பார்க்கலாம்.



வினா :-  இலங்கை இசைத்துறையில் இன்னும் பொற்காலம் வரவில்லை. அதாவது நம்மவர்கள் இன்னும் வளர வேண்டியுள்ளது என்று சொல்லும் கூட்டமொன்று உள்ளது. இது தொடர்பாக ?


                                            



விடை :- நம்மவர்கள் வளரவேண்டும் என்று சொல்லுகின்ற காலம் 
மலையேறி விட்டது. இன்று சர்வதேச ரீதியில் நம்மவர்களின் பாடல்கள் உயர்ந்து விட்டன .பல சிறந்த இசையமைபாளர்கள் ,பாடகர்கள் சிறப்பான படைப்புக்களை வெளியிட்டு வருகிறார்கள் இணையத்தளங்களில் மட்டுமே. இன்று எமக்கு இல்லாத வசதி என்றால் எமது பாடல்களை உலகளாவிய ரீதியில் சந்தை படுத்தும் வசதி . இன்னும் ஒன்று நமது ஊடகங்களின் ஒத்துழைப்பு மேலும் தேவை.நமது கலைஞர்களின் பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்புவது குறைந்துவிட்டது.வானொலிகள் ,தொலைகாட்சிகள் முன் வரவேண்டும் திறமைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் இலங்கை தமிழ் இசை துறை வளரும்.


வினா :- இதுவரை எத்தனை இசை தொகுப்புக்கள் குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளீர்கள்?



                                 

விடை :- இதுவரையில் எட்டு இசை தொகுப்புக்களை வெளியிட்டுள்ளேன். 
சுமார் 180 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளேன். 10 குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளேன்.




வினா :-  இன்னும் எவ்வாறான திட்டங்கள இசைத்துறையில் ஆற்ற உங்களிடம் உள்ளன?



விடை :- பல இசை தொகுப்புக்களை வெளியிடவேண்டும் 
பல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். எமது பாடல்களுக்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு தமிழ் சினிமா இசைத்துறையில் இலங்கை கலைஞன் என்று சொல்லும் அளவுக்கு சாதனை செய்யவேண்டும். இதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். வாய்ப்புக்கள் கிடைக்கும் போது நிச்சயமாக என்னுடைய திறமையை வெளிக் காட்டுவேன். இப்பொழுது  இலங்கையில் தாயரிக்கப்படும் கடன்காரன் ,வல்லைவெளி ,காதலுக்காக ,முதல் அடி ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைக்க உள்ளேன். அண்மையில் சிவகாந்தனின் இயக்கத்தில் எனது இசையில் திவ்யா மற்றும் கதிர் நடிக்கும் கடன்காரன் திரைப்பட பூஜை வவுனியாவில் நடைபெற்றதும் குறிப்பிட தக்கது


வினா :-  இதுவரை உங்களுக்குக் கிடைத்த கௌரவங்கள்/ பட்டங்கள் / விருதுகள்?



                                   

விடை :- இதுவரையில் எனக்கு கிடைத்த விருதுகள் - 
இசை இளவரசர் விருது , இசை சுடர் விருது ,வவுனியாவின் இசை மைந்தன், இளம்கலையோதி, இசையூற்று , இசை வித்தகர் போன்ற விருதுகள் கிடைத்தன.ஆனால் ஒரு விடயம் விருதுகளை விட மக்களின் மனங்களில் எமக்கு கிடைக்கின்ற ஆதரவு ஒன்றே போதும்.



வினா :- உங்கள் இசைத்துற வாழ்க்கையில் ஒரு பாடகராக 
இசையமைப்பாளராக, பாடலாசிரியராக பரிணமிக்கும் நீங்கள், பலரை அறிமுகம் கூட செய்துள்ளீர்கள் அவை தொடர்பாக ?



விடை :- நிச்சயமாக எனது சொந்த பாடல்கள் மூலமாக அறிமுகம் 
செய்த கலைஞர்கள் சமயபுரம் ரொஷான் ,சசிகுமார் ,சுபா ,பிரதாபன்,ஜெயபிரதா ,போன்ற கலைஞர்களை அறிமுகம் செய்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.என்னால் அறிமுகம் செய்யபட்டதை விட  அவர்கள் ஏற்கனவே திறமையான கலைஞர்கள் இன்னும் பல பிரபல்யமான கலைஞர்கள் உண்டு.என்னால் இப்போது சொல்ல முடியாது அது அவர்களாக கூறினால் சிறப்பு என நினைக்கிறேன்


                                                     


வினா :-  உங்களுக்கு பாடல்களை எழுதி தரும் கவிஞர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?




விடை :- கலாநிதி தமிழ்மணி அகளங்கன்ஆசிரியர் , 
திரு மாணிக்கம் ஜெகன் ,கவிஞர் பொத்துவில் அஸ்மின் ,சதீஸ் காந்த் ,பாமினி ,ராஜேந்திரா,சாந்தரூபன் ,தர்மலிங்கம் பிரதாபன். எனது காந்தள் பூக்கும் தீவிலே ,எங்கோ பிறந்தவளே போன்ற பல பாடல்களை எழுதிய கவிஞர் அஸ்மின் அவர்கள் விஜய் அண்டனியின் இசையில் நான் திரைப்படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலை எழுதியுள்ளார்




வினா :- வேறு என்ன துறைகளில் உங்களுக்கு ஈடுபாடுகள்?



விடை :- அறிவிப்பு துறை , கவிதைதுறை ,நடிப்பு துறை , 
ஒலிப்பதிவு துறை போன்றவற்றில் நிறைய ஈடுபாடு உண்டு


வினா :- உங்கள் எதிர்கால இலக்கு ?


                                 


விடை :- எமது மண் வாச பாடல்களை உலகளாவிய 
ரீதியில் கொண்டு வரவேண்டும். என்னை போன்ற திறமைகள் இருந்தும் வாய்ப்புக்கள் இல்லாத பல கலைஞர்களை வெளியில் கொண்டு வரவேண்டும். இதை தவிர தமிழ் சினிமாவில் தடம் பதித்து இலங்கை இசைஅமைப்பாளர் சிறப்பான பாடல்களை வழங்கிவருகிறார் என்ற பெயரை என் தாய் நாட்டுக்கு பெற்று கொடுக்க வேண்டும்.இதற்கான் வாய்ப்பு மிக விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

உங்கள் ஆசைகளும் கனவுகளும் நிறை வேற வேண்டும் உங்கள் குரல் வலம் ஆற்றல் உலகெங்கும் சூரியனாய் பிரகாசிக்க வேண்டும் 
வெற்றி நடை போட வேண்டும் அதை என்னைபோன்றவர்கள் பார்த்து மகிழ இறைவன் நாட வேண்டும் என்று உங்களை வாழ்த்தி விடை பெரும் நான் ஒரு சந்தோசத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் 

                                          

தடாகம் கலை இலக்கிய கல்வி,கலை, கலாசார,சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மூலமாக நடை பெறவுள்ள விருது விழாவில்( லங்கா தீபம் )விருதும் இசைத்தீபம் பட்டமும் வழங்கி கௌரவிக்க உள்ளோம் என்ற நல்ல செய்தியுடன் விடை பெறுகின்றேன் 


நன்றிகள் 

பேட்டி :- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 


அமைப்பாளர் (தடாகம் கலை இலக்கிய கல்வி, கலை , கலாசார, சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு )