சனி, 24 டிசம்பர், 2011

தாமரை 06

  பெயர்: யாழ் அஸீம்


யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தில் 1952 .09 .15 ஆம் திகதி யாழ் அஸீம் பிறந்தார்.இவர் பல்துறை ஆளுமை மிக்க கலைஞர்.இவரது தந்தை அப்துல் காதர் அவர்களும் ஒரு எழுத்தாளர்.நிறைய எழுதி இருக்கிறார்.ஆனால் அதை வெளிக் கொண்டு வருவதற்கான சந்தர்ப்பமும் வாய்ப்பும் அப்போது இருக்கவில்லை.நிறையப் புத்தகங்கள் வாங்கி தனது பிள்ளைகளை வாசிக்கத் தூண்டுவார்.தன் மகனை எப்படியேனும் ஒரு வைத்தியராக்க வேண்டும் என்றே அவர் ஆசை கொண்டிருந்தார்.அஸீம் GCE O /L  எழுதி விட்டு பெறுபேரை எதிர்பார்த்திருந்த வேலை மாரடைப்பின் காரணமாக அவர் வைத்தியசாலையில் சேர்த்த போது காலமாகி விட்டார் .கடைசித் தருவாயில் கூட தன் மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு நீ வைத்தியராக வேண்டுமென்று கூறினார்.இன்று நினைத்தாலும் அது அஸீமிற்கு கண்ணீர் தரக் கூடிய நினைவுதான். க.பொ.த. (உயர் தரம்) படித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் எழுதத் தொடங்கி விட்டாலும் 1990 அக்டோபரில் வட மாகாணத்தில்  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட பிறந்த மண்ணின் இழப்பும் அகதி வாழ்க்கையின் வலிகளும்,அவலங்களும் இவரை வேகமாக எழுத வைத்தன.

வாடா மாகாண முஸ்லிம்கள் புலிகள் வெளியேற்றப்பட்டமையானது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பேசப்பட்டது.இதில்  முஸ்லிம்களது சகல சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டன.இந்த கொள்ளைச் சம்பவமானது இலங்கை வரலாற்றில் இடம் பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமாகும்.அது வரலாற்றில் போதுமானளவு உள் வாங்கப்படவில்லை. இலங்கையின் பிற மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் யாழ்ப்பணத்தில் வாழ்ந்தனரா என்று ஆச்சிரியத்துடன் வினவியிருக்கிறார்கள்.எனவே தன் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்குச் சமனான நிகழ்வை பதிவு செய்வது வரலாற்றுத் தேவை என உணர்ந்தார்.இன அழிப்பிற்கு எதிரான (Genocide ) எதிரான ஐ.நா. சாசனத்தின் படி சேர்ந்த வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதும் பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்பிற்குச் சமனான குற்றங்களாகும். இவை இரண்டுமே வட  மாகாண  முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டன."எந்த ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறிந்திருக்க வில்லையோ அந்த சமூகம் அழிந்து விடும்"  என்ற அல்லா மா இக்பாலின் கூற்றுப் படி எமது வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எதிர் வரும் சந்ததிகளுக்கு உரிய முறையில் நடத்தி வைக்க வேண்டியது நமது தார்மீக  கடமையாகும் என்ற உணர்வே இன்னும் அவர் பேனாவை இயக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

எழுத்துக்கள் சமூக மாற்றத்திற்குப் பயப்பட வேண்டும்.அப்படி இல்லாத எழுத்துக்கள்  வேறும் பதர்கள் தான். புதிய தலைமுறைக்குச் சொல்வதும்  இதனைத்தான். இலக்கியம் என்றால் அதற்கு இலக்கு இருக்க வேண்டும்.அப்போது தான் அது காலத்தை,சமூகத்தை செழுமையாக்கும்.எமது படைப்புக்கள் சமூக மாற்றத்திற்குப் பங்காற்ற வேண்டும்.அதற்காகத் தான் எழுத வேண்டும் என்று கூறுவார். சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கின்றார் யாழ் அஸீம்.உடம்பில் எங்காவது வலி வந்தால் உடம்பு முழுவதுமாகத் தான் வலிக்கிறது.அது போலத்தான் சமூகத்திற்கு ஏதும் வரும் போது அது என்னையும் காயப்படுத்துகிறது.ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் அங்கமாக இருக்க வேண்டும்.தான் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் அக்கரை இல்லாவிட்டாலும் அவன் தூய்மையில்லாத இலக்கியவாதியுமல்ல,மனிதனுமல்ல.அந்த வகையில் முடியுமான சமூகப் பணிகளில் தன்னையும் இணைத்துப் பணியாற்றி வருகின்றார்.போரின் வலிகளை,அதன் அவலங்களை நேரடியாக அனுபவித்தவர் உறவினர்கள்,நண்பர்கள்,அயலவர்கள் என பல உயிர்களை பறித்துசக் சென்று விட்ட  இந்தப் போர் மிகக்  கொடியது. ஒரு நாள் இரவு அஸீம் உறங்கிக் கொண்டிருந்த வேளை  ஹெலி கெப்டரில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவைகள் இவரது வீட்டுக் கூரையையும் துளைத்துக் கொண்டு சுவரில் பட்டுத் தெறித்தது மயிரிழையில் உயிர் தப்பினார்.

1990 அக்டோபர் முஸ்லிம்களை வெளியேற்ற சில வாரங்களுக்கு முன் போர் உக்கிரமடைந்த வேளை விமானக் குண்டு வீச்சில் இருந்தும் ஷெல் தாக்குதல்களில் இருந்தும் தப்புவதற்காக புதுப் பள்ளி வாசலுக்கு அண்மையிலுள்ள மாடி வீட்டில் பலர் கூடியிருந்தனர்.அப்போது வானில் வட்டமிடப்பட்ட விமானத்தை நோக்கி புலிகள் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து தாக்கினர்.பதிலுக்கு விமானத்தில் இருந்து போடப்பட்ட குண்டு அந்த மாடி வீட்டின் மீது விழுந்து வெடித்ததில் குழந்தைகள்,பெண்கள் உட்பட 10 பேர் அவ்விடத்திலேயே பலியாகினார்கள்.வார்த்தைகளால் கூற முடியாத அவலங்கள் அவை.அது மட்டுமன்றி அஸீம் தங்கையின் கனவை ஜலீல் புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பலி கொடுத்துள்ளார்.உரிமைக்கான போராட்டங்கள் தவிர்க்கப்பட முடியாதவை.ஆனால் அந்தப் போராட்டங்களின் தூய வடிவம் கெட்டு விடும் போது அது அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதற்கு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி ஒரு வரலாற்று சான்றாகும்.சிறு பாண்மை உரிமைக்காக போராடுவதாக கூறிக் கொண்டு இன்னொரு சிறுபாண்மையான  முஸ்லிம்களை வடமாகணத்தில் இருந்து இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமன்றி அவர்களின் அசையும் அசையா சொத்துக்களையும் கொள்ளையடித்து கிழக்கில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்தமை அவர்களது போராட்டத்தை களங்கப்படுத்தி விட்டது.இத்தகைய பாதிப்புக்களை எழுத்தில் எழுதுகின்றார்.

ஒய்வு பெற்ற ஒரு விஞ்ஞான ஆசிரியரான இவர் சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.1998 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட விமர்சன விருது விழாவில் தமிழ்ச் சேவையில் முதலாம் இடத்திற்கான விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரத்தூங்காவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.தமிழ் முஸ்லிம் இன உறவைக் கட்டியெழுப்பும் வகையில் இவரால் படைக்கப் பட்ட பல கட்டுரைகள் மற்றும் கவிதைக்காக 2007 ஆம் ஆண்டு இன உறவுகளையும்,தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான கேத்திர நிலையம் இவரை கௌரவித்தது.2008 ஆம் ஆண்டு தமிழ் கலைஞர் வட்டத்தின் (தகவம்)சிறுகதைப் படைப்பிற்கான முதலாவது பரிசைப் பெற்றுள்ளார்.சமூகவியல்,புனைக்கதை,சிறுவர் இலக்கியம்,ஆத்மீகம்,விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆக்கங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரது பல் துறைச் சேவையைப் பாராட்டி கலாபூஷணம்,வடப் புலச்சான்றோர்,சாமஸ்ரீ,தேச கீர்த்தி,அகஸ்த்தியர் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.30 வருட ஊடகவியல் சேவையைப் பாராட்டி வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 2011 ஆம் ஆண்டுக்கான கௌரவ ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இவரைத் தொடர்பு கொள்ள வேண்டுமாயின்,தொடர்புகளுக்கு : யாழ் அஸீம்,
                                     228 /1 ஜும்மா மஸ்ஜீத் வீதி,
                                     மாளிகாவத்தை,
                                     கொழும்பு - 10

தொலைபேசி : 071 - 2268466இவரின் பணி தொடர இதயத்தால் வாழ்த்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக