வியாழன், 4 ஏப்ரல், 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை தடாகம் குடும்பத்தினரின் நல் வாழ்த்துக்கள்


ஒற்றுமை வெள்ளியே....!
(இத்ரீஸ் யாக்கூப் )

ஒற்றுமை வெள்ளியே
எங்கள் வானிலே
என்று நீ முளைப்பாய்?
வேறுபாட்டுத் திரைகளை
எங்கள் விழிகளில்
என்றுதான் அகற்றுவாய்?
மக்கள் மாளிகையில்
சரித்திரமாக வீசி வந்த
சமாதானக் கொடியிங்கே
நரித்தனக் கத்திரிகளால்
நறுக்கப்பட்டு நச்சு நிறங்கள் பூசி
கட்சிகளின் பெயரால்
கம்பங்களில் கட்டி
காசாக்கப் படுகிறதே...!
சமுத்திரத்தில் சுவர்கள் எழுப்பி
சூறையாட நினைப்பதெல்லாம்
சுகபோகக்காரர்களின் சந்தர்ப்ப சூழ்ச்சியே
அதை அறியாது அன்பானவர்களை
அந்நியர்களாக்கிப் பார்ப்பது
மனிதநேயத்தின் வீழ்ச்சியே!
கண்கெட்டக் கூட்டத்தினருக்கு
பண்பாட்டு வைத்தியம் தேவை
புறமெங்கும் பரவி வரும்
பிரிவினைஇருள் விலக
புரிதலின் திரிகளை ஏற்றுவதே
இன்றைய நம் முக்கிய சேவை...!
ஆம் அன்பானவர்களே..!
வாருங்கள் ஒன்றுபடுவோம்!
சகமனிதரை நேசிப்போம்
அகத்தின் ஒளியில்
வாழும் யுகங்களை அர்த்தமாக்குவோம்

அமைப்பாளர் அனுமதியோடு
ரமலான் தீன்
தகவல் பிரிவு
தடகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி அமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக