வியாழன், 9 மே, 2013

தடாகத் தாமரை -11தனித் தமிழ் தென்றல்

இந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களில் ஒருவராக பெயர் கூறிப்பிட்டு சொல்லலாம் தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாக கொண்டவர் ஆரவாரம் எதுவுமின்றி எழுதி வருபவர் அவர்தான்.
சகோதரக் கவிஞர் -மு. ஆ. பீர்ஒலி
முதன்மை வர்த்தக ஆய்வாளர் தெற்கு தொடர்வண்டித் துறை, மதுரை மண்டலம்


பேட்டி : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அமைப்பாளர் தடகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார               சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு01 . தங்களின் முதல் கவிதை எது? எந்த இதழில் வெளி வந்தது?
அப்பொழுது தங்களுக்கிருந்த மனநிலை எப்படியிருந்தது?


1973 ம் வருடம் அமெரிக்கன் கல்லூரி, மதுரை யில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது உதயத்தில் உருவான  ‘மலர்கிறது’  (நித்திரைப் பயணங்கள்-பக்கம் 19 ல் பதிவாகியுள்ள
) அந்த கவிதைதான் எனது கல்லூரியின் ‘குரல்’ பத்திரிக்கையில் வெளியானது.
இரவின் அமைதியில்
உறக்கத்தின் கைச்சிறையில்
பருவத்தின் மொட்டு
கனவாய் மலர்கிறது
நினைவின் நித்திரையில்
நிசப்த நீள் திரையில்
ஸ்பரிசத்துச் சுவர்க்கத்தில்
பனி அரும்பு மலர்கிறது
உண்மையின் ஒளி தன்னில்
உணர்ச்சியின் உயிர்த் துடிப்பில்
தூய்மைக் கொடி தன்னில்
தெய்வீகம் மலர்கிறது
வறுமைத் தழுவல்களில்
வருத்த அழுத்தங்களில்
கண்ணீர்க் கதகதப்பில்
கவிதை மலர்கிறது


எழுதிய முதல் கவிதையே அங்கிகாரம் பெற்று கல்லூரி இதழில் பிரசுரமானதும் நண்பர்கள் பாராட்டியதும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அந்த காலக்கட்டத்தில் இலக்கிய சிற்றிதழ்களின் தாக்கங்கள் நிறையவே இருந்தது. மருத்துவம் பயின்று கொண்டிருந்த டாக்டர். அருணகீதாயனனின் ‘பாடித்தேன் கவிவனம்’ என்ற இதழில் அடுத்த கவிதை பிரசுரமானது. அந்த இதழை தொலைத்த நிலையில் எழுதிய 4 பத்திகளில் 1 பத்தி மட்டுமே அப்படியே நினைவில் கொள்ள முடிந்தது. நித்திரைப் பயணங்கள் அச்சேரும் வரை எவ்வளவோ முயன்றும் எழுதிய கருத்து மட்டுமே நினவில் நிற்க அந்த வரிகளை நினைவில் கொள்ளமுடியாமல் வேறு வார்த்தைகளில் எழுத மனமின்றி அந்த 1 பத்தி மட்டுமே 

அச்சில் இணைத்தேன்.
திசை தெரியா பறவை
தஞ்சமென்று வந்தவளை
பஞ்சணையில் புடம் போடும்
பாவமயப் பொய்கையில்
மான சிறுகுருவி
மல்லாந்து மிதக்கிறது
(நித்திரைப் பயணங்கள்-பக்கம் 55 ல் பதிவாகியுள்ளது)


02 .  ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?


தான் வாழும் சமுகத்தின் அவலங்களை, அறியாமையை, அநீதியை தைரியமாகச் சுட்டிக் காட்டுபவைகளாய் இருக்க வேண்டும். தன்னைப் படித்து, மனிதனின் அகம் புறம் மாயைகளை உணர்த்தி ஒவ்வொரு கவிதையும் எதாவது ஒரு ஆக்கப்பூர்வமான விடியலுக்கான வித்தைப் பரிணமிக்க வேண்டும்.

03 . உங்கள் படைப்புகளுக்காக ஒவ்வொரு நாளையும் எப்படித் திட்டமிடுகிறீர்கள் ?

உண்மையை திறந்த மனதுடன் சொல்வதென்றால், எழுத வேண்டும் என்று திட்டமிடுவதில்லை. நான் அன்றாடம் சந்திக்கும், பார்க்கும், பாதிக்கும் விஷயங்கள் எனக்குள் இழைந்து உழன்று கொண்டேயிருக்கும். அந்த உணர்வுகள் என்றாவது ஒரு நாள், எத்துனை நாட்கள் என்று சொல்ல முடியாது, தூக்கத்தில் கூட கவிதையாய் உறுமாறும். அக்கனமே எழுதிவிடுவேன். பெரும்பாண்மையும் அந்த வரிகள் மறுதிருத்தம் செய்யாமலேத்தான் பதிவு செய்யப் பட்டுள்ளன.
நித்திரைப் பயணங்கள்-பக்கம் 51/52 ல் பதிவாகியுள்ள விடியலை நோக்கி... என்ற கவிதையின் கரு 1980 களிலேயே என்னைப் பாதித்த விஷயங்கள். நித்திரைப் பயணங்கள் இரண்டாம் பிழைத்திருத்தம் முடிந்து அச்சேரும் சமயம் மணிவண்ணன் ஐயா(தகிதா பதிப்பகம்) தொடர்பு கொண்டு இன்னும் கூடுதலாய் பக்கங்கள் இணைத்தால் சிறப்பாய் இருக்கும் என தகவல் சொல்ல, அடுத்த தொகுப்பான ‘நினைவின் நிசப்தம்’ திற்காக (மார்ச் 2012) எழுதிக் கொண்டிருந்த கவிதைகளில் ஒன்று தான் இது.


கழிவு நீரோடை
சிறு மதகு
சல்லடித்து சல்லரித்து
வேர்த்திருந்தான்.
குப்பைத் தொட்டி
இரை தேடி
காகங்கள் ஒருபுறம்
நாய்கள் மறுபுறம்
இடையில்
பொறுக்கிய இலைகளை
ஆய்ந்து கொண்டிருந்தவன்
ஆராய்ச்சி தடைபட்டது
தெரு முனையில்
ஓரு பிச்சைக்காரியின் முனங்கல்
வயிற்றுப்பசி போக்க
யாருடைய பசிக்கோ
இரையாகிக் கொண்டிருந்தாள்
இது சுதந்திர நாடு
விடியலை நோக்கி.

04 . கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

கவிதை என்பது மனதிற்குள் தீர்க்கமாக உணரப்பட்ட, சமூக அக்கரையுடன் இணைந்த ஆழ் மனதின் உணர்த்தலின் வெளிப்பாடாகவே நன் கருதுகிறேன். கவிதையின் கருத்துத்தான் அவசியம். வடிவம் எப்படி இருந்தால் என்ன? சொல்ல நினைந்த கருத்தைத் தெளிவுபட சொல்வதுதான் கவிதை. எதிர் காலக் கவிதைக் குறித்து சொல்ல இயலவில்லை. Classical, Renaissance then Modern Literature என ஒவ்வொரு கால கட்டங்களிலும் கவிதை ஒவ்வொரு பரிணாமங்களைத் தாண்டி வளர்ந்துள்ளது. மனித நேயம் குறித்த சிந்தனை சமூக விளிப்புணர்வுடன் கூடிய உணர்வுகள் இருத்தல் அவசியம்.


05 . தங்களின் குடும்பம் குறித்து கொஞ்சம் ?


மனைவி, இரு மகள்கள் ஒரு மகன். மனைவி B.Sc.,(Chemistry), இல்லத்தரசி. மூத்தமகள் M.Sc.,(IT), கடைசிமகள் பத்தவது படித்துக் கொண்டிருக்கிறாள். மகன் B.E (ECE) கடைசி பருவம் நான் M.A (Eng.Litt)., B.L., தெற்கு தொடர் வண்டித்துறையில் மதுரையில் முதன்மை வர்த்தக ஆய்வாளர்.


06 . இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?


நான் துளிர்விடும் இளந்தளிர். மனதிற்கு சரியென்று பட்டதை, அனுபவித்தை, கிரகித்த விஷயங்களை, மனிதம், மானுடம், ஆன்மிகம், களங்கமற்ற அன்பு உண்மை இவைகளின் தேடலில் உள் உணர்வு சொல்வதை எழுதுகிறேன். இவைகள் இலக்கிய உலகுக்கு பங்களிக்கின்றனவா என்பதை அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
07 எழுத்துத்துறைக்குள் நீங்கள் வந்தது பற்றிக் கூறுங்கள்?

1973ல் இருந்தே ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கவிதை எழுதி வருகிறேன். 1981ல் ‘தி விஷன்’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். இப்பொழுது அதை பேராசிரியர் மணிவண்ணன் ஐயா அவர்கள் தமிழாக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். தகிதா பதிப்பகம் விரைவில் வெளியீடு செய்யும். அவ்வப்பொழுது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய போதும் 2012 ல் உத்தியோகம் மற்றும் பொது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அணுபவங்கள், மனித மனங்களின் முரண்பாடுகள், நம்பகத்தன்மையற்ற சந்தர்ப்பவாத சுயநல மனிதர்களின் அடையாளம் இவைகள் ஜூன் 2012ல் விருப்ப ஓய்வு கொடுக்க வைத்தது. ஆனால் எனது மேல் அதிகாரி மதிப்பிர்குறிய எல். வீரநாராயணன் அவர்களின் ஆலோசனையின் பேரில் மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2012 உத்தியோகத்திற்குத் திரும்பினேன்.
அன்று எனக்குள் ஒரு நிகழ்வு. இனிமேல் நான் மிகவும் விரும்பிய இலக்கியத்தை மட்டுமே பற்றி, சுவாசித்து, உணர்ந்து அதன் வழி எனக்கும் இந்த மானுடத்துக்கும் சமுதாயத்திற்கும் என் இலக்கிய பயணத்தை பயணுடையதாய் செய்யமுடியுமா என்ற எண்ணத்தில் நித்திரைப் பயணங்கள் தொகுப்பில் பதிந்த முதல் கவிதையை எழுதினேன்.


மலரின் பயணம்
கார் காலம்
படர்ந்து விரிந்த
மேக சிறகுகள்
சிறைப்பட்டிருக்கும் நிலவு
முரண்பாடுகள்
செதுக்கிய
பரிணாம சுவடுகள்
ஒளியைத் தேடி
ஒரு மலரின்
பயணம் தொடங்கியது.


இந்த காலகட்டத்தில் தான் கோவை தகிதா பதிப்பகத்தின்
அறிமுகம் கிடைத்தது. நித்திரைப் பயணங்கள் என்ற தலைப்பில் கவிதை நூல் ஒன்று எழுதிக் கொண்டிருப்பதையும் அதை பதிப்பித்து வெளியிட முடியுமா என்ற விண்ணப்பத்திற்கு மனமுவ ந்து வெளியிடுவோம் என்று என்னை ஊக்குவித்து முகநூல் வழி என்னை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டியது தகிதா...தகிதாதான். அப்பொழுது என்னுடன் கைகோர்த்து பயணித்த என் ‘கவிதைச்’ சகோதரன் பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் என் எழுத்துக்களை அங்கீகரித்து என்னைப் படித்து ஊக்குவித்து என்னை எழுத்துத்துறைக்குள் ஐக்கியமடையச் செய்தார்.


08 . கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?

கவிதையென்பது காலத்தின் கணிதம். கவிதைக்குள்
பொதிந்துள்ள கருத்து பயண்பாடாய் காலத்தைக் கட ந்து வென்றிடுதல் நன்று.


09 . படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?

நிச்சயமாக உண்மையைச் சொல்கிறேன். படிமங்களையும் குறியீடுகளையும் நான் கையாளுவதில்லை. அவைகள் தான் என்னை கையாளுகின்றன. ஏனென்றால் அவைகளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எனக்குள் உள்ள அந்த உந்து சக்தி கவிதையாய்ப் பிரசவிக்கின்றது படிமங்களில் தவழ்கின்றது.


10 . புலம்பெயர் கவிஞர்களில் 2000 ற்குப் பின்னர் யார் யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?

வருடங்களைப் பற்றி சரியாகத் தெரியாது. புலம் பெயர் எழுத்தாளர்கள் வரிசையில் நான் வியந்த மனிதர்களில் நண்பர் கங்கை மகனும் தோழி சிவ மேனகையும். இவர்களது தெளிந்த சமுதாய சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது. கவிஞர்கள் கோபிநாத், நடா சிவா, ராஜேந்திரகுமார் மற்றும் ஈழவாணி இவர்களது கவிதைகள் படித்திருக்கிறேன், குறிப்பிடத்தக்கவர்கள்.


11 . எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?

அவ்வப்பொழுது தங்கள் படைப்பாளிகளின் படைப்புக்களை வாசித்துள்ளேன். திருப்திகரமாய் உள்ளது. சகோதரி தங்களின் படைப்புக்களைக் குறித்து என்னால் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தங்களின் எழுத்துக்களில் இழையோடிடும் வேகம், விவேகம், அழுத்தமான கருத்துக் குவியல், சமூகநலச் சிந்தனை என்னை மிகவும் வெகுவாகவே கவர்ந்துள்ளது.


12 . தாடாகம் கலை இலக்கிய வட்டம் பற்றி உங்கள் கருத்து ?

ஒரு பொதுவான சிந்தனையுடன், சமுக அவலங்களுக்கு,
புறக்கணிப்புகளுக்கு எதிராய் இலக்கியச் சிந்தனையுடன் ஆக்கப் பூர்வமாய் குரல் எழுப்பும் அமைப்பாகவே கருதுகிறேன்.


13 . தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் ஈழத்து பத்திரிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?

மண்ணிக்கவும். நான் படித்ததில்லை. அதனால் கருத்துக் கூற இயலவில்லை.


14 . இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து தாங்கள் கருதுவது யாது ?

இந்த பங்களிப்பு நல்ல விஷயங்களுக்குப் பயண்படுமெனில் வரவேற்கத்தக்கதுதான். மாறாக தவறான பாதையில் சென்று விடக்கூடாது.


15 . பின் நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற ஏற்றதொரு கோட்பாடாக உள்ளது என்று கருதுகிறீர்கள்?

நிச்சயமாய். அதில் என்ன சந்தேகம்.


16 . இன்றைய நவீன பெண் எழுத்தில் உங்களை கவர்ந்த எழுத்தக்கள் பற்றி சொல்லுங்கள்?

சகோதரி, தாங்கள், சிவ மேனகை, சுவேதா கிஸ்னா, பாமினி, தனலட்சுமி பாஸ்கரன், ஈழவாணி, ஜோஸபின்பாபா. இன்னும் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய படைப்புக்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் குறிப்பிட முடியவில்லை.17 . இன்றைய சூழல் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?

பெரும்பாண்மையும் இன்றைய சூழலில் பாதித்த விஷயங்கள் குறித்தே எழுதுகிறேன்.

18 . உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?

கற்றது கடுகினும் சிறிது. நிறைய அரிய விஷயங்கள் இலக்கியத்தில் படிக்க வேண்டியிருக்கிறது. முழுமையான உணர்தல், உணர்ந்ததைப் புரிதல், புரிந்ததை அறிதல். அந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்.


19 . யாருடைய கவிதைகளை (எழுத்துக்களை )அதிகம் வாசிப்பீர்கள் ?

கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன்,வாலி, மேத்தா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து ஆகியோரது கவிதைகளை விரும்மிப் படித்துள்ளேன். சாண்டில்யன், கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, மு.வரதராஜன். இவர்களது எழுத்துக்கள் என்னை மிகவும் பாதித்துள்ளது. யவன ராணியை மூன்று தடவைக்கு மேல் முழுமையாக படித்திருக்கிறேன். கடைசியாகப் படித்தது நாண்கு வருடங்களுக்கு முன்பு. யவண ராணியை நினைக்கும் பொழுதெல்லாம் அவளின் அறிவுக் கூற்மை, அழகு, சாதுர்த்தியம், தன்னலமற்ற பான்பு, தியாகம் என் மனதை நெகிழவைக்கும்.
பாவை விளக்கு திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன். இன்னும் அந்த கதாபாத்திரங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
குறிஞ்சி மலர், அகல் விளக்கு, கரித்துண்டு மறக்க முடியாத புனிதங்கள்.

20 .  உங்களது இலட்சியம் எதிர்பார்ப்பு என்ன ?

இலக்கியம் வழி இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய
முடிந்தால் திருப்தி. எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே கொடுக்கும்.


21 . உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பரிசுகள் பற்றி ?

பாராட்டும் பரிசும் கிடைத்தால் சந்தோசம். கிடைக்கதெனில் வருத்தம் இல்லை.


22 . வளரத் துடிக்கும் இளையவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?

நானும் வளர்ந்து கொண்டிருப்பவன்தான். எனக்கு சொல்லிக் கொள்வதையே நான் சொல்கிறேன். தன்னை அறிந்து, உறவுகளை, மனிதர்களை, சமுதாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளத் தலைப்படுதல் ஒரு ஆக்கப்பூர்வமான விடிதலுக்கு வித்திடும்.

23 . இறுதியாக உங்களுடன் தொடர்பு கொள்ளவது (கலையுள்ளங்க
ள்)எவ்வாறு ?


மு. ஆ. பீர்ஒலி,
முதன்மை வர்த்தக ஆய்வாளர்
தெற்கு தொடர்வண்டித் துறை,
மதுரை மண்டலம்
23, ராஜேந்திரா, 3வது தெரு,
கரிமேடு, மதுரை-16.

அலை பேசி – 94422 91093

மின் அஞ்சல் – peeroli1955@gmail.com

இணையதளம்- thevisionbypeeroli.blogspot.com

நித்திரைப் பயணங்கள் கவிதை நூலை இணையத்தில் தரவிறக்கம் செய்வதற்கு இந்த இணையத்தைப் பயண்படுத்தவும்.....

M. A.pdf download - 2shared
www.2shared.com
M. A.pdf download at 2shared.document M. A.pdf download at www.2share.com.


நன்றி சகோதரனே நன்றி

1 கருத்து: